இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐ. நா மனித உரிமைகள் சபை தீர்மானம் குறிப்பிட்ட ‘ கலப்பு பொறிமுறை’ அரசியல் ரீதியாக சாத்தியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவே சாத்தியமான வழி என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் ‘2017 தேசிய சட்ட வார’ வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கலப்பு பிறிமுறையை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ‘திருத்தம்’ ஒன்றை மட்டும் கொண்டுவந்தால் போதாது என்றும் நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு கோரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை தான் ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விளங்கப்படுத்தி இருப்பதாகவும், அதனால் தென் ஆப்பிரிக்கா போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இஸ்தாபிப்பது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் தென் ஆப்பிரிக்காவின் உண்மை மற்றும் ஆணைக்குழுவின் நன்மை தீமைகள் குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.
அத்துடன் எல்லா கட்சிகளுமே இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் இணக்கப்பாட்டை கொண்டிருப்பதாகவும் அதேவேளை இந்த ஆணைக்குழுவை அமைக்க புதிய அரசியலமைப்பு தொடர்பில் அடைப்படை இணக்கப்பாடு அவசியம் என்றும் கூறியுள்ளார்.
இரு தரப்பிலும் உள்ள கடும்போக்காளர்கள் இதனை நிராகரிப்பர் என்றும் அதனை மத்திய அரசு கையளவேண்டி இருக்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.