இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும், புதிய தீர்மான வரைவு வெளியாகியுள்ளது.
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 அவது அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த வரைவுத் தீர்மானம் நேற்றிரவு ஜெனிவாவில், பேரவையின் உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
அதற்கமைய, 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும், பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிப்பார்.
2015 ஐ.நா தீர்மானத்தில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30/1 தீர்மானத்தில், உண்மை கண்டறியும் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பொறிமுறைகளை அமைக்க வேண்டும் என்றும், போரின் போது இழைக்கப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நீதுிபதிகளின் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கு பரந்தபட்ட அளவில் சட்ட மற்றும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
நேற்று வெளியாகியுள்ள தீர்மான வரைவின் முற்கூட்டிய பிரதி ஒன்றரைப் பக்கங்களில் மாத்திரம் அமைந்துள்ளது.
அதில், 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வரவேற்புத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டின் மனித உரிமைகளை ஊக்குவிக்க ஐ.நாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இலங்கையிடம் இந்த தீர்மான வரைவில் கோரப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான இந்த தீர்மான வரைவு குறித்து விவாதிக்கும் முதல் முறைசாராக் கூட்டம், வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 07) ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இணை அனுசரணை நாடுகள், பேரவையின் உறுப்பு நாடுகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகப் பிரதிநிதிகள், உள்ளிட்டவர்கள் பங்கேற்று தீர்மான வரைவு வாசகங்கள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்களின் வரைவுகளை இணை அனுசரணை நாடுகள் சமர்ப்பிப்பதற்கான இறுதிக் காலக்கெடு மார்ச் 16ஆம் திகதி முடிகிறது.
வரும் மார்ச் 23ஆம் திகதி, இந்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.