நாம் என்ன செய்தால் ஜெ. ஆன்மாவுக்கு புண்ணியம் கிடைக்கும்.. ஓ.பி.எஸ் தரும் விளக்கம்!

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகாமல் நாம் தடுப்பதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு நாம் செய்யும் புண்ணியம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது,

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் ஆட்சியும், கட்சியும் என்னிடம் இருக்க வேண்டும் என்று சிலர் கூறினர். அப்போது நான் வேண்டாம் என்று கூறினேன். எனினும் என்னை வற்புறுத்தியதால் ஜெயலலிதா உயிரிழந்தபோது நான் முதல்வராகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும பதவியேற்றுக் கொண்டேன்.

சிறிது நாள்கள் கழித்து என்னை சந்தித்த சில அமைச்சர்கள் சசிகலாவிடம் கட்சி பொறுப்பை ஒப்படைக்கக் கூறினார்கள். அதன்படி அவர் கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் இன்னும் சில நாள்கள் கழித்து ஆட்சியும், கட்சியும் ஒருவரிடத்தில் இருந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்பதால் என்னை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்தனர்.

பின்னர் அதற்கு சம்மதித்தேன். சசிகலா முதல்வர் பதவியில் இருக்க மக்கள் விரும்பவில்லை, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் அவர் நீடிப்பதற்கு கட்சித் தொண்டர்கள் விரும்பவில்லை.

எனவே கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகாமல் நாம் தடுக்க வேண்டும். இதுவே ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு நாம் செய்யும் புண்ணியம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.