பொதுச்செயலர் பதவி: தினகரன் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு! சசிகலாவே பதில் தர உத்தரவு!!

சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பது தொடர்பான புகாரில் டிடிவி தினகரன் சசிகலாவிற்கு பதிலாக விளக்கம் அளித்திருந்தார். இதனை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

அதிமுகவின் விதிப்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இதற்கு கடந்த மாதம் 28ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதற்கான பதிலை சசிகலா அளிக்காமல், சசிகலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்திருந்தார். அதில் கட்சி விதிகளின்படியே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இதில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்றும் தினகரன் கூறியிருந்தார். மேலும், இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் முழு நேரப் பொதுச் செயலாளரை நியமிக்க வேண்டுமானால் மட்டுமே முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் பதில் அளித்திருந்தார்.

இந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துள்ளது. அதிமுகவின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத டிடிவி தினகரன் அளிக்கும் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் வரும் 10ம் தேதிக்குள் சசிகலாவே பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சசிகலாவிற்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசிற்கு சசிகலாதான் பதில் அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சசிகலா அங்கீகரிக்கும் நபரின் கையெழுத்துடன் பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.