அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு டிரம்ப் ஆதரவு

அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரலாக பதவி வகிப்பவர் ஜெப் செசன்ஸ். இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ரஷிய தூதர் செர்கெய் கிஸ்ல்யாக்கை இரு முறை சந்தித்து பேசி உள்ளதாக வெளியான தகவல்கள், உள்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து நடைபெறுகிற விசாரணையில் இருந்து ஜெப் செசன்ஸ் தாமாக முன் வந்து விலகி உள்ளார்.

அதே நேரத்தில் தனது நியமனம் தொடர்பான செனட் சபை விசாரணையின்போது, ரஷிய தூதருடனான தனது சந்திப்பு குறித்து கூறாதது, தவறு அல்ல என்று அவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.

இருப்பினும் அதை எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி ஏற்கவில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

ஆனால் இதை ஜனாதிபதி டிரம்ப் நிராகரித்து விட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஜெப் செசன்ஸ் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. செசன்சுக்கும், ரஷிய தூதர் செர்கெய் கிஸ்ல்யாக்குக்கும் இருந்ததாக கூறப்படுகிற தொடர்பு பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் செசன்ஸ் நேர்மையான மனிதர். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சியினர் சூனிய வேட்டையில் ஈடுபடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.