இலங்கையில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மையின மக்கள் தொடர்பான பிரதிநிதி ரீடா ஐசாக் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும், சமஸ்டி முறையின் கீழ் இவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இலங்கையை துண்டாடும் வகையில் தீர்வுத் திட்டமொன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர் பரிந்துரை செய்த முதல் சந்தர்ப்பம் இதுவென கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரீடா ஐசாக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை விஜயம் குறித்த அறிக்கையை ஐசாக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தனது நிலைப்பாட்டை வெளியிட உள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியவை என 24 விடயங்களை ஐசாக் பரிந்துரை செய்துள்ளார்.
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தலா ஏழு பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் தேசவளமை சட்டம் அதே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் ஐசாக் கோரியுள்ளார் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.