ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு காரணம் தி.மு.க. தான். அவர்கள் தற்பொழுது இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூடம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றுள்ளேன். அதை சிலர் அரசியலாக்குகின்றனர். தமிழக மக்களுக்கு பாதகமாக இருக்கும் திட்டங்களை அதிமுக அரசு எதிர்க்கும். மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்தத் திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.
அதேபோல் தமிழக மக்களுக்கு பாதகமாக எது இருக்கிறதோ அதை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த விடமாட்டோம். ஹைட்ரோ ஹார்பன் திட்டம் வருவதற்கு தி.மு.க-தான் காரணம். தற்போது இந்த திட்டத்துக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.