ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்.கே.நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் தற்பொழுது ஒரு சிலர் விசாரணை கமிஷன் கேட்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.
இந்நியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் தான் என்ற நிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா, அவர் வழியில் செயல்படும் இந்த அரசு அவரின் கனவுத் திட்டங்களை நினைவாக்க பாடுபடும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவித்த பெரும்பாலான திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைக்க பார்த்தனர். தற்போது அவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து வசைபாடுகின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். அது தான் உண்மை எனக் கூறினார்.
மேலும் எம்.ஜி.ஆர் இருந்த போது ஜெயலலிதாவை அவமானப்படுத்தியவர் பி.எச்.பாண்டியன். ஆனால், தற்போது அவர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் தற்பொழுது ஒரு சிலர் விசாரணை கமிஷன் கேட்பது ஏன்? அவர் இறந்த உடனேயே ஏன் அவர்கள் சந்தேகம் எழுப்பவில்லை என்றும் கேட்டுள்ளார்.