ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைத்தோம், ஆனால் அவரை அழிக்க வேண்டும் என்று நாங்கள் ஒரு போதும் எண்ணியதில்லை என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் உருக்கமாக தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் துரைமுருகன் பேசியதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 8 மாதங்களில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு திட்டப் பணிகளாவது நடந்துள்ளதா?. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கக் கூடாது என்றுதான் நினைத்தோமே ஒழிய, அவர் இந்த பூமியில் இருக்கக் கூடாது என்று என்றுமே நினைத்ததில்லை.
ஜெயலலிதா திறமைசாலி, அனைத்து விஷயங்களையும தெரிந்து கொண்டுதான் பேசுவார். அப்படிப்பட்ட அவரை நாம் இழந்துவிட்டோம்.
வரும் சட்டசபைத் தேர்தலில் என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகின்றீர்கள். அதிமுக தயவோடு திமுக ஆட்சி அமைத்தால் அதைவிட ஒரு கேவலம் வேறில்லை என்றார்.