அதிகாரங்கள் சமஷ்டி அடிப்படையில் பகிரப்பட வேண்டும்!

இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக, சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மையின மக்கள் தொடர்பான பிரதிநிதி ரீட்டா  ஐஷாக்க் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் ரீட்டா  ஐஷாக் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரீட்டா  ஐஷாக், அது தொடர்பான அறிக்கையையும் ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் இலங்கை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் இம்முறை ஐ.நாவில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில், அவை குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.