ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்ட மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள்அவர்களது ஊடகச்சுதந்திரத்தினைப் பாதிப்பதாக உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊடக சுதந்திரம் பற்றியும், தகவலறியும் உரிமைபற்றியும் பேசிக்கொண்டு இருக்கும் இந்த அரசு ஊடகவியலாளர்களது குரல்வளைகளை நெருக்கிப்பிடிப்பதை என்றுமே ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஊடகவியலாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வடமாகாண சபை உறுப்பினர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மிகவும் மோசமான சொற்களால் பேசி திட்டிய சம்பவத்தினால் மக்கள் விசனமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.