மனித நேயம் இல்லாது போய் நாட்டில் மிகவும் ஆபத்தான சமூக நிலைமை உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ – ஹெரகொல்ல ஒச்சடிவத்தை முஸ்லிம் வித்தியாலத்தின் 25 வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பணத்திற்கு மாத்திரமல்ல பணத்தை பெற்றுக்கொண்டு எவற்றையும் காட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் சிலர் நாட்டில் இருக்கின்றனர்.
குறிப்பாக அரசியல்வாதிகள் தமது தாயை கூட தட்டில் வைத்து விற்பனை செய்ய தயாராக இருக்கும் காலம் ஏற்பட்டுள்ளது.
நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கல்விக்கு விசேடமான இடத்தை வழங்கினேன்.
கல்வியமைச்சருடன் பல மணிநேரம், பல வாரங்கள் கலந்துரையாடி கல்வி மறுசீரமைப்பை ஆரம்பித்து நாட்டிற்குள் கல்வியில் பெரிய வளர்ச்சியை ஏற்படுத்த முடிந்தது.
நவவோதய திட்டத்தின் கீழ் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா இரண்டு பாடசாலைகள் என்ற கணக்கில் 700 பாடசாலைகளை தெரிவு செய்து கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்றதன் காரணமாக அங்குள்ள பாடசாலைகளில் அதனை மேற்கொள்ள முடியாது போனது.
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது பாடசாலைகளில் அதிபர்கள் இருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு செல்ல தயாராக இருந்தனர்.
கஷ்டமான தூர பிரதேசங்களுக்கு சென்று பணியாற்றிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டது.
இவ்வாறு பாடசாலைகளை முன்னேற்றி கொண்டு செல்லும் போது அரசாங்கம் மாறியது. தற்போது முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. தற்போது நாங்கள் கல்வி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.