கூட்டு எதிர்க்கட்சி இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச உட்பட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இணைய உள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மஹாகல்வெவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருக்கும் இவர்களில் சிலருக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைத்து புதிய கட்சியை ஆரம்பித்தால் அது அவரது அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாக மாறும்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் தேசிய தலைமைத்துவம் நோக்கி செல்லும் பயணத்தை தடுக்க பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்க போவதில்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.