மாயமான எம்.எச் 370: தேடும் பணிகளுக்கு 50 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டும் பெண்மணி!!

மாயமாய் போன மலேசிய விமானம் எம்.எச். 370-யில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் இணைந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டி தங்களது சொந்தங்களை தொடர்ந்து தேட முடிவு செய்துள்ளனர். நிதி திரட்டும் பணிகளை ஜக்யூட்டா ஜோம்ஸ் என்ற பெண்மணி தலைமையேற்று நடத்துகிறார்.
விமானத்தை தேடும் பணிகள் கைவிடப்பட்ட நிலையில் மலேசிய விமானத்தை தொடர்ந்து தேட ஜக்யூட்டா ஜோம்ஸ் என்பவர் முன்வந்துள்ளார். மலேசிய விமானம் வரலாற்று புத்தகத்தில் மர்மமாகவே முடிந்து விட கூடாது என தெரிவித்தார் ஜோம்ஸ். இவரின் கணவர் மாயமான விமானத்தில் ஊழியராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேசிய விமானமான எம்.எச். 370, 2014 ஆம் ஆண்டு மார்ச் 8-ம்தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி புறப்பட்டது. 239 பேர் பயணம் செய்த இந்த விமானம் திடீரென ரேடார்களில் இருந்து மாயமானது. நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தேடும் பணிகளில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மூன்று ஆண்டாக நடைபெற்று வந்த தேடும் பணிகள் ஜனவரி 17 அன்று நிறுத்தப்பட்டது. மலேசிய போக்குவரத்து மந்திரி லியோவ் டியொங் லை மாயமான மலேசிய விமானம் குறித்த இறுதி அறிக்கை இந்த ஆண்டு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.