அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அங்கு தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிலையை கடைப்பிடித்து வருகிறார்.
பதவியில் அமர்ந்ததும் 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறவும், அமெரிக்கா வந்து செல்வதற்கும் 6 மாதத்துக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் ஐ.டி. துறையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியர்களே பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறதே என்ற எண்ணத்தில் ஐ.டி. துறைகளுக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஐ.டி. நிறுவனங்கள் நஷ்டப்படும் அளவுக்கு கடுமையான முறையில் இரு மடங்கு சம்பள உயர்வு அறிவித்தார். அடுத்த கட்டமாக வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய செல்வதற்கான ‘எச்.1பி’ விசா வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்தார். பல்வேறு கெடுபிடிகளையும் நிபந்தனைகளையும் விதித்தார்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இடி தாக்குவது போல் எச்.1பி விசா வழங்குவதையே நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி முதல் 6 மாதத்துக்கு தற்காலிகமாக ‘எச்.1பி’ விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்கா இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
‘எச்.1பி’ விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்திய ஐ.டி. ஊழியர்கள் கடுமையான பாதிப்பு அடைவார்கள். ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்கள் தவிர புதிதாக ஊழியர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல முடியாது. இது தற்காலிகம் என்று அறிவித்தாலும் தடையை மேலும் மேலும் நீடித்துக் கொண்டே செல்லவும் அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்பு எச்.1 பி விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவருக்கு மிக எளிதாக பணி விசா பெறும் நிலை இருந்தது. அந்த சிறப்பு சலுகை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
இதனால் எச்.1பி விசா பெறுபவர்கள் மனைவி அல்லது கணவனுக்கு என்று விசா பெற இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது விசா வழங்குவதையே நிறுத்தி விட்டது. இது எதிர்காலத்தில் அமெரிக்கா செல்லும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இருந்து ஐ.டி. வேலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அந்த ஐ.டி. வேலைகள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கே கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.