இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித்சர்மா ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக விளையாடி வரும் அவர் டெஸ்ட்டில் மிடில் ஆர்டரில் ஆடுகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் நடந்த 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா காயம் அடைந்தார். இந்த காயம் காரணமாக அவர் 4 மாதங்கள் விளையாடவில்லை. இங்கிலாந்து தொடர், வங்காளதேச டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் ஆகியவற்றில் அவர் ஆடவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டில் விளையாடும் ஆர்வத்துடன் உள்ளார். இதற்காக அவர் சென்னையில் நடந்த விஜய் ஹாசரே போட்டியில் விளையாடினார்.
மும்பையை சேர்ந்த அவர் ஆந்திராவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 33 பந்தில் 16 ரன் எடுத்தார். தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சென்னை வந்து அவரது ஆட்டத்தை பார்த்தார்.
இந்த நிலையில் டெஸ்டில் எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருப்பதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நன்றாக குணமடைந்து விட்டேன். நான் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 4 மாதத்துக்கு பிறகு திரும்பி வந்துள்ளேன். நான் சிறிது பதட்டத்துடன் இருக்கிறேன்.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருக்கிறேன். அணி நிர்வாகம் தொடக்க வீரராக ஆட சொன்னாலும் சந்திப்பேன்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ரகானே, கருண் நாயர் இடத்தில் ரோகித் சர்மா இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.