இந்திய மண்ணில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி லயன் சாதனை

* பெங்களூரு டெஸ்டில் இந்திய அணியை சுருட்டி வீசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 22.2 ஓவர்களில் 4 மெய்டனுடன் 50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் அவர் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இந்திய மண்ணில் ஒரு இன்னிங்சில் வெளிநாட்டு பந்து வீச்சாளரின் மிகச்சிறந்த பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1996-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் குளுஸ்னர் 64 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

இவர்களை தவிர்த்து பாகிஸ்தானின் சிகந்தர் பாக்த் (1979-ம் ஆண்டு டெல்லி டெஸ்டில் 69/8), ஆஸ்திரேலியாவின் ஜாசன் கிரெஜ்சா (2008-ம் ஆண்டு நாக்பூர் டெஸ்டில் 215/8) ஆகியோரும் இந்தியாவில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள்.

* 1921-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆர்தர் மைலே 121 ரன்கள் வழங்கி 9 விக்கெட்டுகளை காலி செய்தார். அவருக்கு பிறகு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரின் அற்புத பந்து வீச்சாக லயனின் செயல்பாடு அமைந்துள்ளது.

* 29 வயதான நாதன் லயன் இதுவரை இந்தியாவுக்கு எதிராக 58 விக்கெட்டுகள் (12 டெஸ்ட்) கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை கபளகரம் செய்த ஆஸ்திரேலிய பவுலர் என்ற சிறப்பையும் பெற்றார். இதுவரை முதலிடம் வகித்த பிரெட்லீயை (53 விக்கெட், 12 டெஸ்ட்) அவர் பின்னுக்கு தள்ளினார்.

* இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் மூன்று முறை 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற மகத்தான சாதனையும் லயன் வசம் சேர்ந்துள்ளது. அவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டு டெல்லி டெஸ்டிலும் மற்றும் 2014-ம் ஆண்டு அடிலெய்டு டெஸ்டிலும் இந்தியாவுக்கு எதிராக தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வேறு எந்த பவுலரும் இந்தியாவுக்கு எதிராக இரண்டு முறைக்கு மேல் 7 விக்கெட் எடுத்தது கிடையாது.

* முதலாவது டெஸ்டில் 105 மற்றும் 107 ரன்களில் ‘சரண்’ அடைந்த இந்திய அணி அதைத் தொடர்ந்து இப்போது பெங்களூரு டெஸ்டிலும் 200 ரன்களுக்குள் அடங்கி விட்டது. சொந்த மண்ணில் தொடர்ந்து 3 இன்னிங்சில் 200 ரன்களுக்குள் இந்தியா ஆட்டம் இழப்பது 1977-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

* இந்திய கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் லயனின் பந்து வீச்சில் விக்கெட்டை தாரைவார்ப்பது இது 5-வது நிகழ்வாகும் புஜாராவும், ரஹானேவும் தங்களது டெஸ்ட் வாழ்க்கையில் குறிப்பிட்ட பவுலரிடம் அதிக முறை விக்கெட்டுகளை இழந்திருக்கிறார்கள் என்றால், அது இவரிடம் தான். விராட் கோலி ஏற்கனவே இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சிலும் 5 முறை வீழ்ந்துள்ளார்.