ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை பொறிமுறையை நீர்த்துப்போக செய்யும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இராஜதந்திர காய்நகர்த்தல்களை ஐ.நாவில் இலங்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என இம்முறை புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே, இம்முறை தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனவே, இதனை நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், விசாரணைப் பொறிமுறையிலிருந்து சர்வதேச நீதிபதிகளை நீக்குவதற்கான வாய்ப்பில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, யுத்தக்குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கவோ, கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவோ இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே ஐ.நா தீர்மானத்திற்கு வெளிநாட்டு பரிந்துரையை நீர்த்துப்போக செய்வதற்கு இலங்கை முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.