மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னவாம் மன்னர்க் கொளி.
நேர்மையான ஆட்சியே ஆட்சியாளர்களின் புகழ் நிலைத்திருக்க காரணமாக இருக்கின்றது. ஆட்சியாளர்கள் நேர்மையாக ஆட்சி செய்ய தவறினால் அவர்களின் புகழ் நிலைத்திருக்காது என்று வள்ளுவ பெருந்தகை கூறுகிறார்.
உலகில் நாடுகளை ஆட்சி செய்தவர்கள் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்த போதிலும் அவர்களின் கொடுங்கோன்மையான ஆட்சி அவர்களின் புகழை நிலைக்காது செய்து விட்டது.
இதற்கு சிறந்த உதாரணம் ஜேர்மனியின் ஆட்சியாளர் அடோல் ஹிட்லர். அவர் மனிதன் என்ற ரீதியில் எந்தளவு சிறந்தவராக இருந்தாலும் அவரது கொடுங்கோல் ஆட்சி உலக அழிவுக்கும் மக்களின் அழிவுக்கும் வித்திட்டது.
இதனால், புகழ் ஏணியின் உச்சத்தில் இருக்க வேண்டிய திறமையான ஹிட்லர் பல தசாப்தங்கள் கடந்தும் இன்னும் வில்லனாகவே பார்க்கப்படுகிறார்.
இலங்கையில் ஒரு காலத்தில் இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து ஜெனிவா வரை சென்று முறைப்பாடு செய்தவர் தான் மகிந்த ராஜபக்ச.
1988ம் 89ம் ஆண்டுளில் தென் ங்கையில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராடியதால், அவர் சிங்கள மக்கள் மனங்களில் ஒரு கதாநாயகனாக வலம் வந்தார்.
காலம் உருண்டோடி மகிந்த ராஜபக்சவும் இலங்கையின் ஆட்சியாளராக பதவியில் அமர்ந்தார். 2005ம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என எவரும் எண்ணவில்லை.
சந்திரிக்கா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் அன்று இருந்த வெறுப்பு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பாக அமையும் என்றே பலரும் கருதினர். ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்தன.
அந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் கேட்டிருந்தமையால் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. வடக்கு, கிழக்கு மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தில் ரணில் தோற்றுப் போனார்.
மகிந்த வெற்றி பெற்றார்.தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காத போதிலும் ரணிலின் தோல்விக்கும் மகிந்தவின் வெற்றிக்கும் தமிழ் மக்களே காரணம் என்பதை மறுக்க முடியாது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பீடம் ஏறிய மகிந்த ஆரம்பத்தில் தமிழர் தரப்புடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை ஒப்புக்கு நடப்பது போலவே நடந்தது.
ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் பேச்சுவார்த்தையை முறித்து போருக்கு செல்வதற்கான தருணத்தை அன்றைய அரசு பார்த்து கொண்டிருந்தது.
மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடியதை காரணம் காட்டி மகிந்த அரசாங்கம் போரை ஆரம்பித்தது.
தமிழ் மக்களின் தாயக பகுதிகளில் தரை, கடல், வான் என மும்முனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அன்று மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, மருந்து என்பவற்றை கூட போர் நடைபெற்ற பிரதேசங்களுக்கு அனுப்ப மறுத்தது.
இந்த போர் முள்ளிவாய்க்கல் நந்திக்கடல் களப்பு வரை பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த போரில் இலங்கை படையினரால் மனித உரிமைகள் மீறப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐ.நாவும் கூறிய போதிலும் அவற்றை மகிந்த அரசு மறுத்தது.
போர் முடிந்து சரணடைந்த மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் சிறார்களும் சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் என மிகப் பெரிய துன்பங்கள் அனுபவித்தனர்.
இந்த மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. ஆடு மாடுகள் போல் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முள்வேலி முகாம்களை மகிந்த அரசு படிப்படியாக மூடியது. மக்களை சொந்த இடங்களில் குடியேற்றியதாக அரசு அறிவித்தது.
எனினும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் போருக்கு பின்னரும் மக்கள் கடும் அச்சத்திற்கு மத்தியிலேயே தமது வாழ்நாளை கழித்தனர்.
தற்போதும் அதில் பெரிய மாற்றங்கள் ஏதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ராஜபக்ச அரசு இராணுவத்தை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை அடக்கி ஆண்டது.
வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல போருக்கு பின்னர் முழு நாட்டிலும் அரசின் கொடுங்கோன்மை கொடிகட்டி பறந்தது.
அரசுக்கு எதிராக பேசுவோர் கடத்தப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்துவோர் சுடப்பட்டனர். நாடு முழுவதும் அரச அடக்குமுறையை வெளிப்படையாகவே காணமுடிந்தது.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் போர் வெற்றி வீரன் என மகிந்த ராஜபக்சவுக்கு இருந்த புகழ் மங்கத் தொடங்கியது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புறம். இந்த மக்கள் வெளிப்படையாக பேசா விட்டாலும் மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் சிங்கள மக்களின் வாக்குகள் எமக்குத் தான் கிடைக்கும். இனிமேல் நாமே இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆளப் போகிறோம் என்ற மமதையில் இருந்தனர் ராஜபக்சவினர்.
எனினும் தென் பகுதி சிங்கள மக்கள் அரசாங்கத்தின் அடக்குமுறையை புரிந்து கொண்டனர். இதனால், மகிந்தவின் போர் வெற்றி அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை.
தேர்தல் ஒன்று வரும் வரை காத்திருந்தனர், மகிந்தவும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார்.
தருணம் பார்த்திருந்த மக்கள் தேர்தலில் தமது பதிலை ராஜபக்சவினருக்கு அளித்தனர். சிங்கள மக்களின் வாக்குகளை நம்பிய மகிந்தவுக்கு சிறந்த பதிலடி கொடுக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு எப்படி தமிழ் மக்கள் காரணமாக இருந்தார்களோ அவரது தோல்வியை தீர்மானிக்க அவர்களே முக்கிய காரணமாக அமைந்தார்கள் என்பதும் மறுக்க முடியாதது.
இதனால், வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல் நேர்மையான கொடுங்கோன்மை இன்றி ஆட்சி செய்யும் ஆட்சியாளர் புகழ் நிலைப்பது மாத்திரமல்ல அந்த புகழ் தோற்றும் போகாது.