இது எங்கள் பூமி, நாங்கள் தனி நாடு கேட்கவில்லை: தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்!!

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கேப்பாப்புலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

கேப்பாப்புலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டத்தின் மூலம் தமது நிலங்களுக்குச் சென்ற பிலக்குடியிருப்பு பொதுமக்களும் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேப்பாப்புலவு முகாமுக்கு முன்பாக ஜந்தாவது நாளாக தொடர்ச்சியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது சொந்த மண்ணில் என்ன வளம் இல்லை ஏன் இப்படி எம்மை இந்த அரசும் இராணுவம் நடத்துகின்றது. இதனால் இவர்களுக்கு என்ன இலாபம் நாம் தனி நாட்டை கேற்கவில்லை. எமது சொந்த மண்ணையே கேட்கின்றோம்.

எமது நிலங்கள் விடுவிக்கப்படும்வரை இந்த வீதியில் கிடந்து மாண்டு போவமே தவிர சற்றும் நகர மாடடோம் என இன்று 5வது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கேப்பாப்புலவு மண் எமது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி அந்த மண் இராணுவத்தின் பாசறை என எமது ஊரின் பிரதான வீதியை மறித்து பிரம்மாண்டமாக வாசல் அமைத்து பாரிய படைத்தலைமையகத்தை அமைத்து அங்கே பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை நிலை நிறுத்தி எமது மண்ணில் உள்ள வருமானம் தரும் வளங்களை எல்லாம் சூறையாடி வருகின்றனர்.

நாமோ மாதிரிகிராமம் என்னும் போர்வையில் அகதிமுகாமில் வாழ்ந்து வருகின்றோம். எங்களை எங்கள் சொந்த இடத்திற்குள் விடுங்கள். இது எங்கள் பூமி. நாங்கள் தனி நாடு கேட்கவில்லை. இது எங்கள் பாட்டன், பூட்டன் நிலம் என்றும் அம்மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுவருகின்றனர்.

இதேவேளை அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது.