தமிழகத்தில் பாஜகவை வளரச் செய்ய எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் கடினம்தான் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அரசியலில் முகவரி இல்லாத அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான சான்றுகள் நிறையவே இருக்கிறது.
பொன்.ராதாகிருஷ்ணன் எவ்வளவு முயற்சித்தாலும் அவரது கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த விரக்தியின் விளிம்பில் நின்றுதான் இப்படி பேசி வருகிறார். ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க திமுக பெயரைச் சொல்லும் அவசியம் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பாஜக ஒரு மேலாதிக்கம் கொண்ட கட்சி. அந்தக் கட்சியிலே இன்றைக்கு பொன். ராதாகிருஷ்ணன் போன்ற ஒருவர் அமைச்சராக வந்துள்ளதற்கும் கூட திராவிட இயக்கம் தான் காரணம் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க நீங்கள் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அதை வளரச் செய்வது கடினம் தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.