பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி – 50 பேர் காயம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒருவர் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு கூட்டம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.9 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டது.

குறிப்பாக, சுரிகாவ் நகரத்தில் உள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன. இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் பலியானார். சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான சொத்துகளுக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.