வாருங்கள்…. சீரடி சாய்நாதனை தரிசிப்போம்!

சாய்பாபாவால் கவரப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் இந்து பக்தர்கள் மட்டுமின்றி, இஸ்லாமிய பக்தர்களும் அடங்குவார்கள். அவர்களில் இமாம்பாய் சோடாய்கான் என்பவர் குறிப்பிடத்தக்கவர்.

இவரது சொந்த ஊர் அவுரங்காபாத். இவர் ஆங்கிலேயர் ஆட்சியில் காவலாளராக பணி புரிந்தார்.

ஒரு தடவை கிறிஸ்தவ ஆசிரியர் ஒருவரை ஏதோ ஒரு வழக்குக்காக விசாரணை செய்தார். அப்போது அவர் அந்த ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

அந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த அந்த ஆசிரியர் செத்துப் போய் விட்டதாக இமாம் பாய் நினைத்தார்.

மிகவும் பயந்து போன அவர், தன் மேலதிகாரி அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் அவர் தன் மீது வழக்குத் தொடரப்படலாம் என்று பயந்தார்.

இதனால் அவர் இந்த குழப்பங்களில் இருந்து தப்பித்து, மன அமைதி பெறுவதற்காக தர்வேஸ் ஷா என்ற முஸ்லிம் மகானிடம் சென்று சரண் அடைந்தார். ஆனால் தர்வேஸ் ஷா வோ, ‘‘என்னிடம் ஒன்றுமில்லை. உடனே சீரடிக்கு புறப்பட்டுச் செல். சாய்பாபா பின் பக்கமாக நின்று குரானில் உள்ள ஒரு பகுதியை சொல். அவரிடம் இருந்து எந்த பரிசு பொருளையும் வாங்காதே… எல்லாம் சரியாகி விடும்’’ என்றார்.

அவர் உத்தரவுப்படி இமாம்பாய் அன்றே சீரடி புறப்பட்டு சென்றார். மசூதியை நோக்கிச் சென்ற போது, தெருவில் பாபா நின்று கொண்டிருக்க, அவரை ஒரு பெண் தரிசித்துக் கொண்டிருந்தாள்.

உடனே இமாம்பாய், மெல்ல நடந்து சென்று சாய் பாபாவின் பின்னால் சற்றுத் தொலைவில் நின்றபடி குரானின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை மனதுக்குள் ஓதினார்.

பாபாவுக்கு நாம் ஓதுவது எங்கே தெரியப் போகிறது? என்ற சிறு ஆணவம் அவர் மனதில் குடி கொண்டிருந்தது. ஆனால் நடந்ததோ வேறு.

இமாம்பாய் குரானின் குறிப்பிட்ட பகுதியை ஓதி முடித்ததும், சாய்பாபா திடீரென திரும்பினார். இமாம்பாயைப் பார்த்து, கண்டபடி திட்டினார்.

பாபா கோபப்படுவார் என்பதை இமாம்பாய் எதிர்பார்த்தே வந்திருந்தார். எனவே அவர் மனம் கலங்கவில்லை. பாபாவைப் பின் தொடர்ந்தார்.

பாபா துவாரகமாயி மசூதிக்குள் சென்று அமர்ந்தார். இமாம் பாயும் மசூதிக்குள் செல்ல முயன்றார். ஆனால் பாபா அவரை உள்ளே வர அனுமதிக்கவில்லை. ‘‘வெளியே நில்’’ என்று உரத்தக் குரலில் கத்தினார்.

அப்போது அங்கு நின்ற, காக்கா சாகேப் என்பவர் பாபாவிடம், ‘‘அவர் பாவம் இல்லையா? ஏன் இப்படி திட்டுகிறீர்கள்? என்றார்.

உடனே சாய்பாபா, ‘‘இவனிடம் பாவம் பார்க்கக் கூடாது. இவன் ஒரு ஆசிரியரை பயங்கரமாக அடித்துப் போட்டுவிட்டு வந்துள்ளான்’’ என்றார். இதைக் கேட்டதும் இமாம்பாய்க்கு தூக்கி வாரிப் போட்டது.

பாபாவுக்கு எப்படி பல மைல் தொலைவுக்கு அப்பால் நடந்தது தெரிந்தது என்று திகைத்தார். அவர் திகைப்பு அகல சில நிமிடங்கள் ஆனது.

‘‘சாய்பாபா எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர்’’ என்பதை அப்போது இமாம்பாய் உணர்ந்தார். அவரையும் அறியாமல் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

இமாம்பாய் தனது தவறை உணர்ந்து உண்மையாகவே வருந்துவதை பாபா கவனித்தார். இமாம்பாய் மீது இரக்கம் கொண்டு மசூதிக்குள் வருமாறு அனுமதி கொடுத்தார்.

மசூதிக்குள் நுழைந்ததும் பாபாகாலில் இமாம்பாய் நெடுஞ்சான் கிடையாக விழுந்தார். அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்த பாபா, ‘‘பயப்படாதே… அல்லா மாலிக்’’ என்றார்.

இந்த ஆசீர்வாதத்தால் இமாம்பாய் மனம் பூரிப்படைந்தது. அவர் உள்ளம் கொதிப்பதில் இருந்து அடங்கி அமைதி பெற்றது. பாபாவை அவர் ஆழமாக நம்பினார்.

அதற்கு விரைவில் உரிய பலன் கிடைத்தது. இமாம்பாய் மீது எந்த தவறும் இல்லை என்று உயர் அதிகாரிகள் முடிவு செய்து அறிவித்தனர். அதன்பிறகு பாபாவின் முக்கியமான பக்தர்களில் இமாம்பாயும் ஒருவராக மாறினார்.

மற்றொரு சமயம் இமாம்பாய் சீரடிக்கு சென்று விட்டு அவசரம், அவசரமாக அவுரங்காபாத்துக்குப் புறப்பட்டார். ஆனால் பாபா அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை.

‘‘இப்போது போக வேண்டாம். தொல்லை ஏற்பட்டு விடும். சற்றுப் பொறுத்துப் போகலாம்’’ என்றார் பாபா.

ஆனால் இமாம்பாய் உடனே வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்று துடித்தார். பாபாவை சமரசம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தபடி சீரடியில் இருந்து வெளியேறி வேகம், வேகமாக நடக்கத் தொடங்கி விட்டார்.

அன்று மாலை 5.30 மணியளவில் அவர் சீரடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள வாரி என்ற இடத்தைச் சென்றடைந்திருந்தார். இன்னும் 4 மைல்கள்தானே உள்ளது என்று வேகம், வேகமாக நடந்தார்.

மூன்று மைல்களைக் கடந்து விட்டார். இன்னும் ஒரு மைல் தூரம்தான் உள்ளது. அந்த இடைப்பட்ட பகுதியில் சுராலா என்று ஒரு நதி உள்ளது.

அதை கடந்து விட்டால் நிம்மதியாக சென்று விடலாம் என்று நினைத்தார். அப்போது திடீரென வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கரமாக புயல் காற்று வீசியது.

அப்போது அந்தப் பக்கம் வந்த கிராம நிர்வாக அதிகாரி, ‘‘இப்போது இந்த வழியாக போகாதீர்கள். மழை வரும் போல் இருக்கிறது. தங்கிச் செல்லுங்கள்’’ என்றார்.

ஆனால் இமாம்பாய் கேட்கவில்லை. தொடர்ந்து நடந்தார்.

திடீரென பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல் ரோட்டோரம் இருந்த அரச மரத்தைத் தாக்கியது. அந்த பெரிய மரம் இரண்டாக பிளந்து விழுந்தது.

இமாம்பாய் அதிர்ச்சியுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அப்போது தன் பின்புறம் சாய்பாபா நிற்பதைக் கண்டார். அவர் அருகில் பழுப்பு நிறத்தில் இரண்டு நாய்கள் நின்று கொண்டிருந்தன.

அதிர்ச்சி நீங்கி தைரியம் பெற்ற இமாம்பாய் கண்களை மூடி தியானித்தபடி சாய்பாபாவை நோக்கி வணங்கினார். கண்ணைத் திறந்து பார்த்தார். அங்கு சாய்பாபா இல்லை. மாயமாய் மறைந்து விட்டார்.

என்றாலும் சாய்பாபா தன்னுடனே இருக்கிறார் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் இமாம்பாயிடம் ஏற்பட்டது. வானம் இடி, இடித்த போதும் அவர் நிற்காமல் நடந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் சுராலா நதி குறுக்கிட்டது. பாபாவை நினைத்தபடி அந்த நதித் தண்ணீரில் இமாம்பாய்  இறங்கினார். முழங்கால் மட்டத்துக்கு தண்ணீர் இருந்தது.

அவர் நதியின் மறுகரையை ஏறும் வரை தண்ணீர் முழங்கால் அளவுக்கே இருந்தது. இமாம்பாய்க்கு அது ஆச்சரியமாக இருந்தது.

கரை ஏறியதும் திரும்பிப் பார்த்தார். அந்த நதியில் மழையால் ஏற்பட்டிருந்த திடீர் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இமாம்பாய்க்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

சீரடியில் புறப்படும் போது பாபா, தன்னைத் தடுத்து சொன்ன அறிவுரைகள் அவர் நினைவுக்கு வந்து சென்றது. அவர் அனுமதியை பெறாமல் வந்த போதும், தன்னைப் பின் தொடர்ந்து வந்து பாபா, தன்னைக் காப்பாற்றி அருளியது பற்றி உணர்ந்ததும் இமாம்பாய் மிகவும் நெகிழ்ந்து போனார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு சாய்பாபா, கண் கண்ட தெய்வம் என்பதை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பரப்பினார். இதனால் இஸ்லாமியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் சீரடி தலத்துக்கு வந்து சாய்பாபாவின் பரிபூரண ஆசிகளைப் பெற்றுச் சென்றனர்.

அப்படி வந்தவர்கள் சாய்பாபாவின் அற்புதத்தை நேரில் அனுபவிக்கவும் தவறவில்லை. அவர்களில் அன்வர் கான் காஜி என்பவரும் ஒருவராவார்.

அகமது நகர் என்ற ஊரைச் சேர்ந்த இவர் தெலிகா கூட என்ற பகுதியில் இருந்த மசூதியை பராமரித்து வந்தார். அந்த பழமையான மசூதியை செப்பனிட்டு சீரமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்வர் கானுக்கு ஏற்பட்டது.

பல இடங்களில் நிதி திரட்ட முயன்றும் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் மசூதி புதுப்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

அப்போது அவரிடம் யாரோ ஒருவர் சீரடி சென்று சாய்பாபாவிடம் விஷயத்தை சொல்லுங்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார்.

உடனே அன்வர்கான் காஜி அகமது நகரில் இருந்து புறப்பட்டு சீரடி வந்து சேர்ந்தார். பாபாவை பார்க்க துவாரகமாயி மசூதிக்கு சென்ற அவர் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியதிருந்தது.

பிறகு பாபாவை சந்தித்தபோது, மசூதியை புதுப்பிக்க நிதி தாருங்கள் என்ற அன்வர்கான் கேட்டார். அவரைப் பார்த்து பாபா புன்னகைத்தார்.

அவர் அன்வர்கானைப் பார்த்து, ‘‘அந்த மசூதி யாரிடம் இருந்தும் பணத்தைப் பெறாது. ஏனெனில் தனக்குத் தேவையான பணத்தை அந்த மசூதியே வைத்துள்ளது’’ என்றார்.

பாபா சொன்னது அன்வர்கானுக்குப் புரியவில்லை. சாய்பாபாவைப் பார்த்து அவர் மலங்க, மலங்க விழித்தார்.

உடனே பாபா அவரைப் பார்த்து, ‘‘அந்த மசூதியின் மாடத்துக்கு கீழ் மூன்று அடி ஆழத்துக்குத் தோண்டு. மசூதியை சீரமைக்க தேவையான புதையல் அங்கு கிடைக்கும். போய் வா…..’’ என்றார்.

அன்வர்கான் காஜிக்கு நம்பிக்கை வரவில்லை. பணம் தராமல் இருப்பதற்காக சாய்பாபா இப்படி சொல்லித் தட்டிக் கழித்து விட்டதாக நினைத்தார்.

ஊர் திரும்பிய அவர், சரி…. எதற்கும் பாபா சொன்னது போல தோண்டித்தான் பார்ப்போமே என்று மாடத்துக்குக் கீழ் தோண்டினார்.

மிகச் சரியாக மூன்றாவது அடி ஆழத்தில் பெரிய புதையல் கிடைத்தது. பாபா சொன்னது உண்மைதான் என்று அன்வர்கான் ஆச்சரியப்பட்டார். அந்த மசூதியை முழுமையாக சீரமைப்பு செய்வதற்கு போதுமான அளவுக்கு அந்த புதையல் இருந்தது.

சாய்பாபா சொன்னது எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கிறது என்று சொல்லி, சொல்லி அகமது நகர் பகுதி முஸ்லிம் மக்கள் பிரமிப்பால் ஆழ்ந்தனர். இந்த நிகழ்வு மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியும் பாபாவின் பார்வையில் இருந்து தப்பவில்லை என்பதை பக்தர்கள் உணர்ந்தனர்.

இப்படி நிறைய அற்புதங்கள் செய்த பாபா, பல பக்தர்களை கனவில் சென்று அழைத்து திருவிளையாடல் செய்துள்ளார்.