தவக்காலம் என்பது உடையை கிழிக்க அல்ல, உள்ளத்தை கிழிக்க. உடலை வருத்த அல்ல, உள்ளத்தை திருத்த. இது தள்ளுபடியின் காலம். இறைவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை, இறைவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்தி தள்ளுபடி செய்து நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்ளும் காலம். பாவியை அல்ல.
பாவத்தை வெறுத்து, அந்த பாவியை அரவணைக்கும் அருளின் காலம். எனவே தவத்துக்கு இது ஏற்ற காலம். நாம், நம் வழிமுறைகளை, வாழ்வு முறைகளை, எண்ணங்களை, சிந்தனைகளை மதிப்பீடு செய்து நம் தவறுகளுக்காகவும் அநீத செயல்களுக்காகவும் வருந்தி அதிலிருந்து திருந்தி இயேசுவை நோக்கி நடைபோட இந்த காலம் நம்மை அழைக்கிறது.
தரையில் தூங்குபவன் தவறி விழுவதில்லை. நாம், நம் வாழ்க்கையில் ஒரே சமநிலையில் வாழ்ந்தால் தவறி விழமாட்டோம். நம் வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. எனவே தான் நாம் தவறுகிறோம். தவறுதான் மனித இயல்பு. ஆனால் அந்த தவறு என்னவென்பதே அறியாமல் இருப்பதும், அறிந்தாலும் அதை ஏற்காமல் இருப்பதும், வருந்தி திருந்தாமல் இருப்பதும், இறைவனிடமிருந்து நம்மை வெகுதூரமாய் தள்ளி வைத்துவிடும். வருந்துவதும், திருந்துவதும் நம் வாழ்வின் வழிமுறையாக மாற வேண்டும்.
நம் வாழ்வில் நாம் யூதாசுகளாக வாழ்கிறோமா? அல்லது பேதுருவாக வாழ்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க இந்த தவக்காலத்தில் அழைக்கப்படுகிறோம். யூதாசு தான் செய்த தவறு குறித்து வருந்தினான். ஆனால் திருந்தி இயேசுவிடம் வரவில்லை. புதிய வாழ்வை பெறவில்லை. பேதுருவோ வருந்தினார். திருந்தினார். இயேசுவிடம் வந்தார். மனம் திரும்பினார். இன்று அவர் புதிய வாழ்வைப் பெற்று புனிதராக வாழ்கிறார்.
எனவே, கடவுள் நம் பாவங்களுக்கேற்ப தண்டனை கொடுப்பதை அவர் விரும்பவில்லை. பாவிகள் சாக வேண்டும் என்பது அவரது விருப்பம் அல்ல. கடவுள், தாம் செய்ய நினைத்த தீங்கு குறித்து மனம் மாறுகிறவர். கடவுள் நமக்கு தண்டனை வழங்க அல்ல. மாறாக, வாழ்வை வழங்கவே தன் ஒரே மகனை அனுப்பினார். எனவே வருந்துவோம். நம் வாழ்வெல்லாம் வசந்தமாகட்டும்.