பெங்களூருவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நிதானமாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்து 48 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.
பெங்களூரு டெஸ்டில் 2-வது நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய பேட்ஸ்மேன் புஜாரா நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலாவது இன்னிங்சில் எங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். மற்றபடி பேட்டிங் வரிசையில் எந்த தவறும் இல்லை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் நன்றாக ஆட வேண்டும் என்பதை முந்தைய இன்னிங்ஸ் மூலம் அறிந்து கொண்டோம். 2-வது இன்னிங்சில் சரியான திட்டமிடலுடன் களம் இறங்குவோம்.
இன்றைய (நேற்று) நாளில் எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். ரன்ரேட்டை பார்த்தால், அவர்களால் அதிக அளவில் ரன்கள் எடுக்க முடியவில்லை என்பது தெரியும். இதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி தான். சரியான அளவில் பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தோம்.
3-வது நாளில் இன்னும் 30 அல்லது 40 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயற்சிப்போம். அவ்வாறு நடந்தால் சிறப்பாக இருக்கும். விக்கெட்டுகளை சாய்க்க, சரியான அளவில், துல்லியமான உயரத்தில்(லென்த்) பந்து வீசுவதில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு புஜாரா கூறினார்.