காயத்தால் லாகூரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் அப்ரிடி!!

கடந்த சில நாட்களாக துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஒன்றில் பெஷாவர் ஷல்மி- கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. பெஷாவர் ஷல்மி அணியில் அப்ரிடி இடம் பிடித்திருந்தார். கராச்சி அணி பேட்டிங் செய்யும்போது, பொல்லார்டு அடித்த பந்தை கவர் திசையில் நின்று கேட்ச் முடிக்க முயன்றார் அப்ரிடி.

அப்போது அவரது விரலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவரை 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக இன்று பாகிஸ்தான் மண்ணில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

கராச்சியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெஷாவர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெஷாவர் ஷல்மி – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதும் இறுதிப் போட்டி போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.