தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன்: ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டை மீட்டெடுப்பதற்காக நடந்த போராட்டத்தின் போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது நெடுவாசலில் நடக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து ‘தியாகம் செய்வோம்’ என்ற பாடலை வெளியிட்டு இருக்கிறேன்.

தமிழர்கள் உரிமைகளை வலியுறுத்தும் இதுபோன்ற பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன். ஒரு தமிழனாக தமிழர்கள் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன். இதனால் மிரட்டல்கள் வரலாம். அதற்காக பயப்பட மாட்டேன்.

எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘புரூஸ் லீ’ படம் திரைக்கு வர இருக்கிறது. இது முழு நகைச்சுவை படமாக இருக்கும். தமிழ் பட கதாநாயகனுக்கும் ஹாலிவுட் ‘ஸ்டைல்’ வில்லனுக்கும் நடக்கும் மோதலே கதை. ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி கலகலப்பான படமாக தயாராகி உள்ளது.

இளையராஜா இசையில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் என்னை இன்னொரு பரிமாணத்தில் பார்க்கலாம். ராஜீவ் மேனன், வெற்றிமாறன், சசி ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்கிறேன். இசையமைத்துக்கொண்டே நடிக்கவும் செய்வேன். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனது இசையில் வந்த ‘உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே,’ ‘வெயிலோடு விளையாடி’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.”

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.