பிரபாஸ் படத்தில் ரஜினி-அஜித் பட வில்லன்கள்

‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு பிரபாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் பிரபாஸ் போலீஸ் கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான பட்ஜெட் ரூ.150 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர்களான ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜாக்கி ஷெராப், தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தில் வில்லனாக நடித்தவர். விவேக் ஓபராய் தற்போது அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவித்தாலும், இப்படத்தில் யார் நடிக்கிறார்கள்? என்பதை கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது. ஒருவேளை இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்கப்போகிறார்களா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.