ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தில் நிக்கி கல்ராணி சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மதன் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடவுள்ளது.
முன்னதாக, இப்படம் பிப்ரவரி 17-ந் தேதியே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தை வெளியிடும் மதன் பைனான்சியர் போத்ரா என்பவரிடம் வாங்கியிருந்த பணத்தை திருப்பி தரவில்லை என்பதால், படத்தை ரிலீஸ் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தார். அதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளிவாரமல் தள்ளிப்போனது.
மறுபடியும், பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வாரம் ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் முடியாமல் போனது. இந்நிலையில், போத்ரா கொடுத்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே, வருகிற மார்ச் 10-ந் தேதி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, மார்ச் 10-ந் தேதி வெளியீட்டில் ஜி.வி.பிரகாஷின் ‘புருஸ்லீ’, ‘மாநகரம்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிசப்தம்’ ஆகிய படங்கள் மோதுகின்றன. தற்போது ராகவா லாரன்சும் இதில் இணைந்துள்ளதாக செய்திகள் கூறுகிறது.