நாட்டில் வன்முறைகளுக்கு காரணம் புலிகளின் துப்பாக்கிகள்!

விசேட அதிரடிப்படையினரின் உதவியை பெற்றுக்கொண்டு மிக விரைவில் பாதாள உலக குழுக்களை அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று மதியம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாதாள உலக குழுக்களை அடக்கும் நடவடிக்கை சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும்.

இதற்காக வெள்ளை வான்களோ, கூலிப்படையினரோ அல்லது வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகளோ பின்பற்றப்பட மாட்டாது.

புலனாய்வுப் பிரிவுகளின் அறிக்கை மற்றும் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த வருட புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடும் போது தற்போது குற்றச் செயல்கள் குறைந்துள்ளன.

எனினும் நடக்கும் குற்றச் செயல்களில் வன்முறையான நிலைமை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது.

வன்முறையான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கான பல காரணங்கள் இருக்கின்றன.

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள், பாதுகாப்பு படைகளில் இருந்து விலகிச் சென்றவர்களும் இந்த வன்முறையான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.