சந்தேகநபருக்கு இராஜதந்திர பதவியா..? சிக்கலில் கோத்தா

இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் கடந்த அரசாங்கத்தில் இராஜதந்திர பதிவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, மேஜர் பிரபாத் புலத்வத்த இராஜதந்திர பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கபில ஹெந்தவிதாரண ஆகியோரே குறித்த அதிகாரிக்கு பதவி வழங்க பரிந்துரைத்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பரிந்துரை வழங்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய மேஜர் புலத்வத்த மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் மேஜர் பிரபாத் புலத்வத்த வெளிநாடு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு காலவரையின்றி தடை விதித்திருந்தது.

2009ஆம் ஆண்டு சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேஜர் புலத்வத்தவின் கீழ் செயற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, மேஜர் பிரபாத் புலத்வத்த வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்த லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு திடீரென பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த கொலை விசாரணைகள் மாற்றப்பட்டமை மற்றும் மேஜர் புலத்வத்தவின் வெளிநாட்டுப் பயணம் நிறுத்தப்பட்டமை என்பன தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மேஜர் புலத்வத்த தலைமையிலான இராணுவ அணியினர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையிலும் தொடர்புபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் ஒருவருக்கு கடந்த அரசாங்கத்தில் இராஜதந்திர பதவிக்கு முன்மொழிந்துள்ளமையினால் கோத்தபாய சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்..