நான்கு சுவருக்குள் கௌதம புத்தரை அடைத்துவிட்டு வீடுகளை அழித்த இராணுவம்!

முல்லைத்தீவு, புதுகுடியிருப்பில் கடந்த நான்காம் திகதி பொதுமக்களின் ஒருபகுதி காணிகளை இராணுவத்தினர் கையளித்தனர்.

இதேவேளை காணிகளுக்குள் சென்ற காணி உரிமையாளர்கள் அங்கே தமது வீடுகளை இரவோடு இரவாக இராணுவத்தினர் சேதமாக்கியதை பார்த்து கண்ணீர் வடித்துள்ளனர்.

மேலும் மக்களின் வீடுகளையும் இராணுவத்தினர் தட்டிப்பறித்துச் சென்றதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விடயம் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இராணுவத்தினர் கைப்பற்றி வைத்திருந்த ஒரு வீட்டின் அறைக்குள் சுமார் 6 அடி உயரமுள்ள கௌதம புத்தரின் படத்தை அவர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டுக்குள் சென்று படத்தினை பார்வையிடும் பொதுமக்கள் தமது பாதணிகளை கழற்றிவிட்டு அதன் பின்னரே சென்று பார்க்கின்றனர்.

இவ்வாறான சூழலில் கௌதம புத்தரின் நற்சிந்தனைகளுள் ஒன்றினையும் நாம் எடுத்து நோக்க வேண்டியுள்ளது

தீய எண்ணத்தை மனதில் நினைத்தால் கூட அதற்கான தண்டனையில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது.

நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

இவ்வாறான தத்துவங்களை கூறிய கௌதம புத்தர் மக்களின் வீடுகளை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்த போதும் பார்த்துக்கொண்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.