பட்டதாரிகளை வேலையில் இணைப்பதற்கு மூன்று நிபந்தனைகள்!

தற்போது வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தினம் தினம் புதிய புதிய பரிணாமம் பெற்றுவருகின்றது.

இந்நிலையில் அவர்ளுக்கு வேலை வழங்குவதானால் பின்வரும் மூன்று நிபந்தனைகள் கட்டாயம் கருத்திற் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்று பட்டதாரிகளை எந்த தொழிலுக்கும் ஆட்சேர்ப்பதற்கு அந்தந்த தொழிலுக்கான ஆட்சேர்ப்புத்திட்டமொன்றுள்ளது. இதனை Scheme of Recruitment என்பர். உதாரணமாக ஆசிரியராக ஆட்சேர்க்கவேண்டுமானால் 2014இல் வந்த ஆசிரியர் சேவைப்பிரமாணக் குறிப்பின்படி ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும். இதுபோன்று சகல தொழிலுக்கும் ஒவ்வொருவகையான ஆட்சேர்ப்பு முறை இருக்கின்றது. அது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இரண்டாவது திறைசேரியின் முகாமைத்துவ சேவையின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். சம்பளம் தொடர்ந்து வழங்குவதற்கு மட்டுமல்ல தொழில் நடைமுறைக்கும் இது அவசியம்.

மூன்றாவது நிதி ஆளுமை ஆகும். 5000 பேரை ஒரு மாகாணசபைக்குள் ஆட்சேர்ப்பதானால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி வளம் தேவை. அது தொடர்பான ஆளுமை அந்தந்த மாகாணசபைக்கு இருக்க வேண்டும்.

இந்நிலையில் பரீட்சையில்லாமல் ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் சில கோரிக்கைகள் இந்த 3 நிபந்தனைகளுக்கு பாதகமாகவிருந்தால் என்ன செய்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.