எக்காரணம் கொண்டும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது: அமைச்சர்

எக்காரணத்தைக் கொண்டும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாதென மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்தியாவின் பங்களிப்புடன் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசமைப்புத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனை இருந்தபோதிலும் அது நடைமுறைக்குச் சாத்தியமற்றது.

அவ்வாறு வழங்கப்பட்டால் ஆயிரக்கணக்கான சம்வங்குகளும், ஆவா குழுக்களும் உருவாகிவிடும்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கியுள்ள இந்தியா இன்று திணறிக்கொண்டிருக்கிறது.

பொலிஸ் திணைக்களத்துக்கு தமிழ்மொழி தெரிந்த தமிழ் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றவர்கள் அதிகமாக நியமிக்கப்படலாமே தவிர தமிழ் பொலிஸ் என்று ஒரு பிரிவை உண்டாக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.