அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கைக்கு ஆபத்து!!

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் 10 வருடங்களுக்கு நீடித்துக்கொள்ளும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் 2007 ஆம் ஆண்டு பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.

அமைச்சரவைக்கோ, நாட்டு மக்களுக்கோ இது பற்றி அறிவிக்கப்படவில்லை. 10 வருடங்கள் ஆயுள்கொண்ட இந்த உடன்படிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

தேவையேற்படின் ஆயுள்காலத்தை மேலும் 10 வருடங்களுக்கு நீடிக்க முடியும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறு செய்வதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது. இந்த உடன்படிக்கையால் இலங்கைக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

யுத்த சூழ்நிலையொன்றில்லாத போது இலங்கைக்கு இதனால் எவ்வித பயனும் இல்லை. மாறாக இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் பாதிப்பாகவே அமைந்துவிடும்.

அமெரிக்கா, இந்தியா அல்லது சீனாவுடன் யுத்தநிலையொன்றை உருவாக்கும்போது நாம் அமெரிக்காவுக்கு உதவ வேண்டியேற்படும்.

இதனால் இலங்கைக்கு எவ்வித பயனும் இல்லை. சீனாவையும் இந்தியாவையும் பகைத்துக்கொள்வதைத் தவிர எவ்வித இலாபமும் இல்லை. பலமான இரண்டு நாடுகள் இவ்வாறான ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் பிரச்சினையில்லை.

எனவே, இதை அரசு செய்யக்கூடாது. இது பற்றி அரசு நாட்டு மக்களுக்கு தது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் இது பற்றிக் கேள்வி எழுப்புவோம் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.