அடிக்கடி அமைச்சர்கள் வருவதால் கடுப்பு.. சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்ற டிராபிக் ராமசாமி வழக்கு!!

சொத்துக்குவிப்பு குற்றவாளியான, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தும்கூர் நகரிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது வந்து சசிகலாவை சந்தித்து செல்வதால் அவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்க கூடாது என்றும், தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் தனது கோரிக்கையில் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

தமிழக கோர்ட்டுகளில் பொது நல வழக்குகளை போட்டு பிரபலமான டிராபிக் ராமசாமி, தற்போது கர்நாடக ஹைகோர்ட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தமிழக சிறைக்கு மாற்றி கொண்டுவர ஆதரவாளர்கள் முயலுவதாக தகவல்கள் வெளியான நிலையில், பெங்களூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலுள்ள தும்கூருக்கு அவரை மாற்ற டிராபிக் ராமசாமி மனு போட்டுள்ளார்.

அதேநேரம், பெங்களூர் விமான நிலையத்திலிருந்து தும்கூர் அருகாமையில்தான் இருக்கிறது என்பதால், இவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும், அமைச்சர்கள் சென்று பார்ப்பதை தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.