1000 டாஸ்மாக் கடைகளை மூடியதால் 600 கோடி இழப்பாம்.. நஷ்டத்தை சமாளிக்க போராட்டம் என்கிறார் அமைச்சர்!!

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடினார்.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு கையெழுத்திட்டார். ஆக, தமிழகத்தில் இதுவரை 1000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம், தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும் என்று கூறினார். மேலும், இதுவரை 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளை மூடியதால் ஏற்பட்டுள்ள இழப்பை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.