ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை வழங்கப்பட்டது..எய்ம்ஸ் பாராட்டு

உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை அந்த மருத்துவமனை அளித்துள்ளதாக என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் கூறியுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த 75 நாட்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 முறை ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.

எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அளித்த சிகிச்சை விவரங்கள் குறித்த அறிக்கையை டெல்லியில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் ஜெயலிலதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார் என்றும் அவருக்கு தவறான மருந்துகள் ஏதும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜெயலலிதாவுக்கு கடந்த 75 நாள்களாக உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை அப்பல்லோ அளித்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை பாராட்டியுள்ளது.