மார்ச் 8ல் சென்னையில் ஓபிஸ் அணி உண்ணாவிரதம்.. அனுமதி வழங்கியது போலீஸ்!

ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர். அதற்காக காவல்துரையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர். ஆனால், போலீசார் அனுமதி குறித்து பதில் அளிக்காத காரணத்தால் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்தனர்.

ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று மனு அளித்தனர். அவர்களுடைய மார்ச் 8ஆம் தேதி போராட்டத்துக்கு, அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்து அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தனர்.

இந்தநிலையில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.