தடையை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை: மூன்று ஜப்பான் கடலில் விழுந்தன!!

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்த நாடு தொடர்ந்து மூன்று முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு கடந்த ஆண்டுவரை நான்கு முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. எனினும், தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

இந்த ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் வட அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம்வரை ஐந்துமுறை அத்துமீறலாக ஏவுகணை சோதனைகளை இந்நாடு நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதன் முதலாக ஒரு ஏவுகணையை செலுத்தியது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாகவும், அடுத்தடுத்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை கண்டம் விட்டு பாயும் ரகத்தை சேர்ந்ததாக இருக்க முடியாது என்றும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. வடகொரியாவின் இந்த அடாவடித்தனத்துக்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றுவரும் நிலையில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு தென் கொரியாவும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளன.