தொலைபேசி ஒட்டுக்கேட்பு: ஒபாமா மீதான புகாருக்கு உளவுத்துறை இயக்குனர் மறுப்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர், எச்.1பி விசா தடை என இது போன்ற பல விவகாரங்கள் அடங்கும்.

இந்த நிலையில் பதவி விலகிய முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா குறித்தும் புகார் கூறியுள்ளார். கடந்தாண்டு குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் களம் இறங்கினார்.

பிரசாரத்தில் இருந்த போது தனது டெலிபோன் உரையாடல்களை டேப் செய்து ஒட்டு கேட்டு உளவு பார்த்ததாக ஒபாமா மீது குற்றம் சுமத்தியுள்ளார். இதன் மூலம் தனது அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். எனவே இதுகுறித்து பாராளுமன்றம் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


அதிபர் டொனால்டு டிரம்ப்

தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்புக்கு ஆதரவாகவும், ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷிய உளவுத் துறை செயல்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு அது குறித்து பாராளுமன்ற குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மீது இத்தகைய குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஒபாமாவின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் உதவியாளர்கள் இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். டிரம்ப் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. எந்த ஒரு அமெரிக்க குடிமகனின் டெலிபோன் பேச்சையும் டேப் செய்யும் படி ஒபாமா உத்தரவிடவில்லை என்றனர்.


எப்.பி.ஐ. உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமே

இந்த நிலையில் அமெரிக்காவின் ‘எப்.பி.ஐ’ உளவுத் துறையும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமே அமெரிக்க நீதித்துறைக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டு தவறானது. அதற்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நீதித்துறை உடனடியாக எந்த பதில் அறிக்கையும் வெளியிடவில்லை.