பறவை காய்ச்சல் பீதி: அமெரிக்காவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தென் கொரியா தடை

தென் கொரியா நாட்டில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. படுவேகமாக பரவிய பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். நாடு முழுதும் உள்ள கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சுமார் 15 லட்சம் கோழிகள் 24 மணி நேரத்துக்குள் அழிக்கப்பட்டன.

இதனால், தென் கொரியாவில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த தட்டுப்பாட்டை போக்குவதற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்திடம் இருந்து முட்டைகள் மற்றும் கோழிகள் உயிருடனும் இறைச்சியாகவும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், டென்னெஸ்ஸி மாநிலத்தில் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் கோழிப் பண்ணை ஒன்றில் H7 எனப்படும் பறவை காய்ச்சல் கிருமித் தொற்று பரவி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்படது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து கோழிகளை உயிருடன் இறக்குமதி செய்யவும், குஞ்சு பொறிப்பதற்காக முட்டைகளை இறக்குமதி செய்யவும் தென் கொரியா நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு இன்றிலிருந்து அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொதிநிலை பதத்தில் பதனப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் இறக்குமதிக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.