ரிவியூ: டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு நடுவர், இந்திய வீரர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஸ்மித்!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த தொடரில் நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால், அதை தெளிவுப்படுத்துவதற்காக ரிவியூ முறை பயன்படுத்தப்படுகிறது.

80 ஓவருக்கு ஒருமுறை இரு அணிகளுக்கும் தலா இரண்டு ரிவியூ வாய்ப்பு வழங்கப்படும். வார்னர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழக்கும்போது, நடுவர் தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலியா ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தியது. அப்போது நடுவர் தீர்ப்பு உறுதியானதால் அந்த அணியின் ஒரு ரிவியூ வீணானது.

15-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஷேன் மார்ஷ் எல்.பி.டபிள்யூ ஆனார். தங்களிடம் ஒரேயோரு ரிவியூ இருந்ததால் அந்த அணி ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஆனால் வீடியோ ரீபிளேயில் பந்து ஸ்டம்பை தாக்காமல் சென்றது. இதனால் இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் இருந்தது.

21-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் 15 வினாடிக்குள் பேட்ஸ்மேன் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். தன்னுடைய எல்.பி.டபிள்யூ அவுட் சரியானது என்று தெரிந்த ஸ்மித் மீதமிருக்கும் ஒரு ரிவியூ வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை.

அதற்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் டிரஸிங் ரூமில் இருந்து கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தலாமா? என்று சாடையில் கேட்டார்.

விதிமுறைக்கு மாறாக இப்படி ஸ்மித் செய்ததை நடுவர் பார்த்து விட்டார். அதேசமயத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோரும் பார்த்துவிட்டனர். ஸ்மித்தின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த நடுவர், அவரை களத்தில் இருந்து உடனடியாக வெளியேற வலியுறுத்தினார்.

இந்திய வீரர்களும் ஸ்மித்தை சுற்றி வளைத்தனர். அப்போது நடுவர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தார். அப்போது அவர்கள் நடுவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘‘DRS என்பது டிரெஸ்ங் ரூம் ரிவியூ சிஸ்டமா?’’ என்று கேலியாக பதிவு செய்துள்ளது.

ஸ்மித் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் ‘‘நான் அவுட்டான நேரத்தில் சற்று மூளை மழுங்கி விட்டது. நான் அப்படி செய்திருக்கக்கூடாது.

நல்ல நோக்கத்திற்காக இந்த போட்டி விளையாடப்படுகிறது என்ற அக்கறை உள்ளது. யாரும் விதிமுறையை மீறவில்லை’’ என்று பதிவு செய்துள்ளார்.