தற்போதைய நவீன உலகில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பலரும் அவதிப்படுவது தவிர்க்க இயலாததாகி வருகிறது. இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
நோய்க்கும், நமக்குமான நட்பை பலப்படுத்தும் சூழலை மாற்ற வேண்டிய அவசியம் குறித்து நாம் கவனம் கொள்வதில் தாமதமாக இருந்து விடுகிறோம். அதனால் பல்வேறு உடல் சார்ந்த சிக்கல்களை நமது நண்பர்களாக மாற்றிக் கொள்கிறோம். வாழ்க்கையையும் பிரச்னைகள் நிரம்பியதாக மாற்றிக் கொள்கிறோம். இத்தகைய சிக்கலில் இருந்து விடுபட யோகா முறைகளை கையாள்வது உலகமெங்கும் பரவலாக இருந்து வருகிறது.
யோகாவில் ஈடுபடுவது உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதில்லை. மனதையும் சீரான முறையில் இயங்க வைக்கிறது. மனநிம்மதியானது எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், வாழ்க்கை பயணத்தை சீரான மகிழ்ச்சியுடன் கொண்டு செல்ல யோகா பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. யோகா என்ற சொல்லுக்கு தமிழில் ஒருங்கிணைப்பது என்ற பொருளை தருகிறது.
மனிதன் தனக்குள் மறந்து கிடக்கும் சக்திகளின் ஆற்றலை கண்டு கொள்வது என்பதே யோகா பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் ஆகும். பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வரும்போது மனதையும் நம்மால் ஒருமைப்படுத்த முடியும். இந்த பயிற்சிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்கள் வராமலும் தடுக்கும் பணியினை கச்சிதமாக செய்கின்றன.