பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் விதமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிக்கப்பட்ட மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று பல நாடுகள் பொதுவிடுமுறை நாளாக அறிவித்துள்ளன. பொது விடுமுறை நாள் என்பதைவிடவும் ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் என்பதே சிறப்பு.
இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என்ற பல வேறுபாடுகளை மறந்து பெண்கள் அனைவராலும் கொண்டாடப்படுவது மகளிர்தினம். இந்த தினத்தின் மூலம் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சாதனைகள் அவர்களது அனைத்து வித உரிமைகளையும் உள்ளடக்கியது என்பதை பெண்கள் உணரவேண்டும்.
சர்வதேச பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக மாற்றியதில் ஓரளவு பங்கு வகித்துள்ளது என்றே கூற வேண்டும். பெண்களின் சுதந்திரம், விடுதலை என்பதில் இன்னும் பல பெண்களுக்கே அது குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை.
அலுவலகம் சென்று வருவது மட்டுமல்ல சுதந்திரம், தமது சம உரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை என்பது தொடங்கி நடைமுறைப்படுத்தும் விதமாக ஆண்களுக்கு புரிய வைத்திட வேண்டும். அந்த நிலையில் தான் சமூக ரீதியிலான புரிந்துணர்வு ஏற்பட்டு பெண் விடுதலையின் தாத்பரியம் அனைவருக்கும் தெரிய வரும்.
கடந்த ஆண்டின் சர்வதேச மகளிர்தின கருப்பொருள்:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படும். கடந்த ஆண்டு “பாலின சமச்சீர்மை’ என்பதை கருப்பொருளாக சர்வதேச மகளிர் தினத்தில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பெண் மற்றும் ஆண் என்ற அனைவரும் இந்த கருப்பொருளை பாலின சமச்சீர்மையை அடைய உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இவ்வாண்டின் உறுதிமொழியாக உள்ளது.
பெண்கள் மற்றும் மகளிர் தங்கள் லட்சியத்தை அடைய தடையாக உள்ள, அதாவது பாலின சமத்துவம் ரீதியிலான தலைமை, மரியாதை மற்றும் மதிப்பு வேறுபாடு, வளர்ச்சி சார்ந்த பல விஷயங்கள் போன்றவை கலாச்சாரம் சார்ந்த அல்லது பணியிடம் சார்ந்த ஒரு பக்கமான நீதிகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இந்த பாலின சமச்சீர்மையை அடைய ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஓர் தலைவராக கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டும்.
சர்வதேச அளவில் இந்த பாலின சமச்சீர்மை என்ற கருப்பொருளை நடைமுறை படுத்தும் விதமான முயற்சிகளை ஆண் மற்றும் பெண் இருபாலரும் இணைந்து செயல்புரிதல் வேண்டும். நாம் கூட்டாக பெண்களுக்கு உதவியாக செய்யும் இப்பணியின் மூலம் உலகம் முழுமையும் பொருளாதார ரீதியிலும் எண்ணற்ற அளவில்லா சிறப்பு சக்தியுடனும் செயல்பட முடியும். இது மிக வேகமாய் நடைபெற வேண்டிய பணி. இந்த உறுதி முழக்கத்தை வெற்றியடைய செய்யும் நோக்கோடு இவ்வாண்டின் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்.
“அறிவு, மனம் மற்றும் ஆன்மீக ரீதியில் பெண் ஒரு ஆணுக்கு சமமாக இருக்கிறாள். அவர் அனைத்து செயல்பாட்டிலும் பங்கேற்க முடியும்” என காந்திஜி கூறுகிறார்.
அதுபோல் பெண்கள் பாலின ரீதியிலும் சமநிலை என்பதை உலகம் உணர்தல் வேண்டும் என்பதே. கடந்த ஆண்டின் மகளிர்தின கருப்பொருளாக திகழ்கிறது.