தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் மூலவர் சுயம்புலிங்கமாய் தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் எனவும், அகத்தியருக்கு தம் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் எனவும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் போற்றப்படுகிறார். கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க, இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும், கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலைசூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம்வந்து வழிபட்டுச்சென்றால் தடைப்பட்டிருந்த அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.
ஒரு சமயம் பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நன்னாள். கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். அதைக் கேட்ட குந்திதேவி பெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமான், குந்தி தேவிக்காக பிரம்ம தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய ஏழு கடல்களையும் வருமாறு செய்தார்.
அதில் குந்திதேவி நீராடிப்பேறு பெற்றார். இந்த ஏழுகடல்களைக் குறிக்கும் ஏழுகிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை பன்னிருமுறை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்ற நம்பிக்கை இன்றும் பக்தர்களிடம் உள்ளது.
பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்த்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யசூர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.