உயிர்காக்கும் கருவியை எடுக்காமல் இருந்திருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நாட்கள் வரை வைத்து கண்காணிக்கப்பட வேண்டிய கருவியை 12 மணி நேரத்துக்குள் எடுத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் எழும் சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மருத்துவ அறிக்கைகளில் கூறப்படும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சூட்டை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் வெளிப்படை தன்மை இல்லை எனக் கூறிய ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர், நீதி விசாரணை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் 32 மவாட்டங்களில் 36 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. ஆவடியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,
ஒரு கேள்விக்குதான் பதில் வந்துள்ளது
“ஜெயலலிதா மரணம் தொடர்பாக 14 கேள்விகளை நாங்கள் எழுப்பியிருந்தோம். அதில் ஒரு கேள்விக்கு மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் பதில் தெரிவித்துள்ளது.
7 நாட்களுக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு பின்னர், அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்படும் என்று அனைத்து அமைச்சர்களுக்கும் டிசம்பர் 4-ந் தேதி தெரிவிக்கப்பட்டது. அந்த கருவி 7 நாட்களுக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
உயிர் பிழைக்க வாய்ப்பு
7 நாட்களுக்குள் ஜெயலலிதாவின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயல்பட 10 சதவீதம் வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்பட்டது. அந்த நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம்.
மறுநாள் காலை அந்த கருவி எடுக்கப்பட்டதை அறிந்தோம். உயிர்காக்கும் கருவியை 12 மணி நேரத்துக்குள் எடுக்க உத்தரவிட்டது யார்? அதற்கு அனுமதி அளித்த சக்தி படைத்த அந்த நபர் யார்? ஜெயலலிதா இயற்கையாக மரணத்தை நோக்கி செல்ல வழிவகுத்தவர் யார்?
சிறப்பு பாதுகாப்பு படையை அனுப்பியது யார்?
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை யார் விலக்க உத்தரவிட்டது? போயஸ்கார்டனில் இருந்த சிறப்பு பாதுகாப்புபடையினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏன் வரவில்லை? அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்களை வெளியே அனுப்பியது யார்? இதுபோன்று 14 கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
ஜெ.ஆலோசனை நடத்தவில்லை
காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. முக்கிய அமைச்சர்களுக்கு ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை.
சிவகுமார் பெயர் வெளியிடப்படவில்லை
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது டாக்டர் சிவகுமார் இருந்தார். அவர் தான் எல்லா விஷயங்களையும் சொன்னார். தமிழக அரசு வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கையில் அவர் பெயர் இடம்பெறவில்லை.
4 விதமான தர்மயுத்தம்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கோரி 4 விதமான தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளோம். முதல் தர்மயுத்தம் உண்ணாவிரதம், அடுத்து சட்டமன்றம், பாராளு மன்றம் வாயிலாக போராடுவது. மூன்றாவதாக அரசியல்சாசனம் வழியாக போராடுவது. அதாவது தேர்தல் ஆணை யம், கவர்னர் வாயிலாக போராடுவது. கடைசியாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வாயிலாக போராடுவது. இவ்வாறு அவர் கூறினார்.