யாழ்.திணைக்களங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்: அரசாங்க அதிபர்

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கும் சில திணைக்களங்களில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் வருகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ். மாவட்டச் செயலகமும், பாலியல் வன்முறை சார் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்’ எனும் தொனிப் பொருளிலான மாபெரும் விழிப்புணர்வு நடைபேரணி அண்மையில் யாழ்.பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திலிருந்து யாழ்.மாவட்டச் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணி யாழ்.மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கும் சில திணைக்களங்களில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் வருகின்றன.

ஆனால், முறைப்பாட்டின் போது வெளிப்படையாகத் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களைக் கூறுவதற்குப் பாதிக்கப்பட்டவர்கள் தயங்குகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படையும் என்பதால் இது குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என மன்றாடிக் கேட்கின்றனர்.

இவ்வாறான வன்முறைகள் இழைக்கப்படும் போது நாங்கள் எமது உறுதியான எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லாது விடில் வன்முறைகளை மேற்கொள்பவர்கள் மீண்டும் மீண்டும் பல தவறுகள் செய்வதற்கு ஊன்றுகோலாக அமையும்.

ஆகவே, பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பேரணிகள் மாத்திரம் நடத்துவதுடன் நின்றுவிடாது நாமனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான செயல் வடிவிலான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்

எமது மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் மற்றும் அலுவலக வன்முறைகள் முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும்.

பெண்கள் வன்முறைகளுக்கெதிரான குரல்கள் வெறுமனே பெண்கள் மட்டத்தில் மாத்திரம் ஒலிப்பதுடன் நின்று விடாது சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஓங்கி ஒலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.