கருப்பு பூனை படை பாதுகாப்பை வாபஸ்பெற்று, நிராயுதபாணியாக ஜெ. கொல்லப்பட்டார்: பி.எச்.பாண்டியன் பகீர்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் அதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், முன்னாள் சபாநாயகரான பி.எச். பாண்டியன் பங்கேற்றார்.

அப்போது, பி.எச். பாண்டியன் பேசுகையில் கூறியதாவது: எல்லோரும் அம்மா அவர்களால் பயன்பெற்றவர்கள், அன்பை பெற்றவர்கள். நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்த அம்மாவின் பாதுகாப்பை இல்லாமல் ஆக்கிவிட்டு, அவரது ஆயுளை முடித்துவிட்டார்களே என்று நினைக்கும்போது எனக்கு வேகம் வருகிறது.

கருப்பு பூனை படை பாதுகாப்பை யாருமே வாபஸ் பெற முடியாது. ஆனால், ‘அம்மா’ ஆஸ்பத்திரிக்கு போகும்போது கருப்பு பூனை போகவில்லை. 75 நாட்களும் அப்பல்லோவில் கருப்பு பூனை படை பாதுகாப்பை நான் பார்க்கவில்லை. நிராயுதபாணியாக ‘அம்மாவை’ ஆக்கிவிட்டு அவரது உயிரை இந்த சதிகார கும்பல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அயோக்கிய மனிதர்கள், நேர்மையற்ற டாக்டர்களை வைத்துக்கொண்டு போலி ஆவணங்களை உருவாக்க முடியும். சொத்துக்களையும், பதவிகளையும் பறிக்க நினைப்போர் டாக்டர்களை பயன்படுத்தி நோயாளியின் உயிரை பறிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளது.

எல்லா டாக்டர்களும் நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் பணத்தாசை உண்டு, அபிலாஷைகள் உண்டு. ஜெயலலிதா மறைந்த 7வது நாளிலேயே பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று முயற்சி செய்து அதை வெற்றி பெற்றார்களே.

முதல்வர் அமைச்சர்களில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம். ஆனால் அமைச்சர்களை வைத்து முதல்வரை நீக்குமாறு பேட்டி கொடுக்க செய்தவர், கைதி எண் 3525 (சசிகலா). கொள்ளையடித்துவிட்டார்கள், பணம் சேர்த்துவிட்டார்கள். பிறகு என்ன, கொலைதான் அடுத்ததாக முடியும். இதை நான் எதிர்பார்த்ததுதான்.

தேசிய பாதுகாப்பு படை சட்டப்படி (1986), பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவிட்டாலோ, ஆயுதத்தை கீழே போட்டுவிட்டாலோ, அவர்களுக்கு மரண தண்டனைதான் உண்டு. கருப்பு பூனைகளுக்கு தூக்கு தண்டனை உறுதி. இவ்வாறு பி.எச்.பாண்டியன் பேசினார்.