சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறைக்கு சென்ற போது ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா அங்கே மூன்று முறை ஓங்கி அடித்தது ஏன் என்று பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன். ஜெயலலிதா மரணம் பற்றியும் மரணத்திற்குக் காரணமானவர்கள் பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
ஜெயலலிதாவின் மரணம் அவரது கட்சியினரையே பல கேள்விகளை கேட்க வைத்துள்ளது. நீதி விசாரணை கேட்டு இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கின்றனர். சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பி.எச். பாண்டியன் இன்று பல கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைத்தார்.
ஜெயலலிதா சமாதி
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் யார் என்பதை இந்த நாடு அறியும். அது அவரவர் மனதிற்கும் தெரியும், எனவேதான் சிறை செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா அங்கே மூன்று முறை ஓங்கி அடித்தார்.
எல்லா டாக்டர்களும் நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் பணத்தாசை உண்டு. எனவேதான் அத்தகையவர்கள் வைத்துக்கொண்டு ஜெயலலிதாவின் உயிரை பறித்து விட்டனர். அந்த மரணத்திற்கு நீதி கேட்டுதான் இப்போது போராட்டம் நடத்துகிறோம்.
குற்றவாளிகள்
அப்பல்லோவில் ஜெயலலிதாவை அனுமதித்த போது அவரை சுற்றிலும் அடியாட்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். எனவேதான் என்ன நடக்கிறது என்பது மக்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றார் பி.எச். பாண்டியன்.
குற்றவாளிகள் சிக்குவார்கள்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தினால் உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள். உண்மை குற்றவாளிகள் யார் என்பதை உலகம் அறியும். பெங்களூரு சிறையில் இருக்கும் குற்றவாளி சதி செய்து வருகிறார் என்றும் பி.எச். பாண்டியன் கூறியுள்ளார்.